காவிரி ஆற்றினால் சூழப்பட்டதும், மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமானதிருவரங்கம் அல்லது ஸ்ரீரங்கம் என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும். இச் சுற்று மதில்களில் வாயில்களாக 21கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதானஇராஜகோபுரம், 72 மீட்டர் (220 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயேபெரிய கோபுரமாக விளங்குகின்றது. இது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது 1987 ஆம் ஆண்டிலேயே ஆகும்.
இத்தல ரங்கநாதர் திருப்பாற்கடலினின்று தோன்றியவர். இவரை பிரம்மா நெடுங்காலமாக பூஜித்து வந்தார். ரங்கநாதருக்கு நித்திய பூஜை செய்ய சூரியனை நியமித்தார். சூரிய குலத்தின் வழித்தோன்றலான ராமபிரான் அயோத்தியில் இந்த ரங்கநாதரை வழிபாடு செய்து வந்தார். ராவணன் சீதையை கடத்தி சென்ற போது, அவனிடமிருந்து சீதையை மீட்க விபீஷணன் உதவினான். ராமரின் முடிசூட்டு விழாவை காண வந்த விபீஷணனுக்கு, தான் பூஜித்து வந்த ரங்கநாதரை அளித்தார் ராமர். விபீஷணன் அதை இலங்கைக்கு எடுத்து செல்லும் வழியில் காவிரி ஆற்றங்கரையில் வைத்து ஓய்வெடுத்துவிட்டு திரும்ப எடுக்கும்போது தரையை விட்டு வரவில்லை. அதுகண்டு கலங்கிய விபீஷணனுக்கு அப்பகுதி மன்னன் தர்மவர்மன் ஆறுதல் கூறினான். ரங்கநாதரும் காவிரிக்கரையிலேயேதங்கியிருக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றார். விபீஷணனைத் தேற்றும் பொருட்டு அவர், தாம் விபீஷணன் இருக்கும் தென்திசை இலங்கை நோக்கி பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மசோழனும் இவ்விடத்தில் கோயில் கட்டிவழிபட்டான். அக்கோயில் காலப்போக்கில் வெள்ளப்பெருக்கில் மண்ணில் மறைந்துபோக, தர்ம சோழ மரபில் வந்த கிள்ளி வளவன் இக்கோயிலை சிறப்புற அமைத்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.
